முடிசூடா நகைச்சுவை மாமன்னர்!

Reading Time: 2 minutes

சிரித்த முகம் , யாரையுமே  குறை கூறியதில்லை , அலட்டல் அறவே கிடையாது.

ஓயாமல் நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர்… பல சாகா வரம் பெற்ற நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக்காரர்.

தனது குடும்பத்தை ஒத்தது அவரது நாடக குழு! அந்த அளவு அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு கட்டுகோப்பாய் நாடகக்குழுவை நிர்வகித்தார். அக்குழுவின் மூலம் எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார்.

வெண்பாவும்  அருமையாய் எழுதுவார். வெற்றிலை பாக்கு போடுவார்.

அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுத திரு.ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் , இரண்டு மூன்று நாட்கள் அவரை கவனித்த தலைவர் என்ன ஒரு மாதிரி டல் ஆ இருக்கீங்களே என்று கேட்டுள்ளார் , அதற்க்கு இவரோ “வெத்தல பாக்கு” போடுவேன் , ஆனா இங்க … என்று தயங்கியுள்ளார்.  அவருக்காகவே திரு.ரஜினியும் அவருடன் வெற்றிலை பாக்கு போட்டு அவரை இயல்பாக இருக்க வைத்தார்.

எந்த சூழலிலும் தேசபத்தியையும் , தெய்வபக்தியையும் ஒளித்துவைக்காதவர்!

கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே நகைச்சுவை நாடகங்களை எழுதி கலக்க ஆரமித்தார்.சுந்தரம் குழுமத்தில் பொறியாளராக பணியாற்றியவர் , வசனம் , நாடகங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் எனவே வேலையை  முடித்துவிட்டு வந்து பக்கம் பக்கமாக எழுதுவார்!

சில நாட்களுக்கு பிறகு பகுதி நேர எழுத்தாளராக சில தமிழ் வார பத்திரிக்கைகளில் பணியாற்றினார் . இவரின் நகைச்சுவை வசனங்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது , நல்ல வரவேற்பையும் பெற்றது.

எஸ்.வீ.சேகர் அவர்களின் மூலம் “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” என்ற நாடகத்திற்கு வசனம் எழுதினார். அந்நாடகம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. அது வரை மோகன் ரங்காச்சாரியாக இருந்தவர் “கிரேசி” மோகன் என்று பிரபலமடைந்தார்.

இயக்குனர் இமையம் பாலசந்தர் அவர்கள் ஒருமுறை ஒரு நாடகத்தை பார்த்து அதை படமாக எடுத்து அதில் பாடலாசிரியர் வாலி அவர்களை “பந்தய சம்மந்தமா” க நடிக்க வைத்து “பொய்க்கால் குதிரை” என்கின்ற முழுநீள நகைச்சுவை விருந்து படைத்தார்.

அவர் பார்த்த நாடகம் “ மேரேஜேஸ் மேட் இன் சலூன்” ! அதை படைத்தவர் நம் கிரேசியே.

திரு.கமலஹாசனுடன் இணைந்து இவர் பணியாற்றிய படங்கள் அனைத்துமே ஹாசிய சரங்கள் ! மைக்கல் மதன காமராஜன் படத்தில் வரும் பாலக்காடு ஐய்யர் வசனங்கள் மிகவும் பிரசித்தி! அப்படப்பிடிப்பின்  போது  திரு.டில்லி கணேஷும் , கமல் அவர்களும் ஒத்திகை பார்த்துள்ளனர் இருவருக்குமே மலையாளம் சரளமாக வருமென்பதால் வசனங்கள் முழுவதும் மலையாளாமாக மாறி விட்டது. இதை கவனித்த கிரேசி “ சாரி நாம தமிழ் படம் தான பன்றோம் , இப்பிடி பேசினாக்க நம்ம ஜனங்களுக்கு புரியாது , ஜோக்கும் கெட்டு விடும்” என்று தெளிவாக கூறி மாற்றினார்.

“கதா நாயகன்” இவர் முழு நீல வசனம் தந்த முதல் படம் . பிறகு அபூர்வ சஹோதரர்கள் , தெனாலி , ஆஹா , பஞ்ச தந்திரம் , பம்மல் கே சம்மந்தம் , வசூல் ராஜா , நான் ஈ என்று எண்னற்ற மறக்க முடியாத , சிரித்து மாளாத நகைச்சுவை விருந்துகள் படைத்துள்ளார்.

மாது பிளஸ் டூ , மீசை ஆனாலும் மனைவி , ஜுராசிக் பேபி , சாக்லெட் கிருஷ்ணா என்று நாடகங்களிலும் சிரிப்பு முத்திரை பதித்தவர்.

இவர் வசனம் எழுதுவதற்கு முன் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைப்பார்                  “ என்னுடைய கதையின் நாயகிக்கு ஜானகி என்றே  பெயர்”  என்பதே  அந்த  நிபந்தனை! யார்  அந்த  ஜானகி ? நம்  கிரேசியின்  பள்ளித்தமிழ் ஆசிரியை! என்ன ஒரு குரு பக்தி பாத்தீர்களா.

மாது , சீனு , மைதிலி , என்ற இவரின் பாத்திர படைப்புகள் நம்முடன் ஒன்றிவிட்டது.

இன்று சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் திரு.சதிஷும் ஒருகாலத்தில் கிரேசி குழு நடிகரே.

வாய் விட்டு சிரித்தால் ஆயுள் கூடும்  என்பார்கள் , ஆனால் வாய் விட்டு சிரிக்க வைப்பவர்களுக்கு அவ்விதி பொருந்தாது போலும்!

சா.ரா

Leave a Reply