வணக்கம் அன்பு வாசகர்களே, கடந்த சில தினங்களாக மனதை உறுத்துகிறது சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மறைவு. தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் இதை பற்றி பேசி வரும் நிலையில், இங்கு நடந்த சம்பவத்தை மீண்டும் ஒரு முறை விளக்கி உங்கள் மனதை மேலும் உருக்க விரும்பவில்லை. திரைப்படத்தை மிஞ்சிய முடிவு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது, யாருமே விரும்பாத வகையில் இருந்துள்ளது அவர்களின் இறுதி நாட்கள்.
வாருங்கள் காண்போம் , சைலேந்திர பாபு போன்ற கண்ணியமானோர் இருக்கும் அதே துறையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது திகிலூட்ட செய்கிறது. இப்படியும் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்க்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும், அதே சமயம் மீண்டும் யாரும் இது போல் சித்திரவதையால் சாக கூடாது. எனவே இவ்வாறான குற்றங்களை நிகழ்வதை குறைக்கும் வழிகளை பற்றி சிந்தித்த போது, காவல்துறை சமூகத்தில் இருக்கும் குற்றங்களை குறைப்பதில் இருக்கும் தன் கழுகு பார்வையை கீழ்கண்ட சில விஷியங்களிலும் செலுத்த வேண்டும் என தோன்றியது,
- புதிதாக பணியில் சேரும் காவலர் முதல் அனுபவமுள்ள காவலர்கள் வரை பாரபட்சம் எதுவுமின்றி அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்டர் பர்சொனல் ஸ்கில்ஸ் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இந்த இன்டர் பர்சொனல் திறன் பயிற்சியில் உடன் வேலை பார்ப்பவர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் ,கைதி செய்யப்பட்டோர் ஆகியவர்களிடம் எப்படி பொறுமையுடனும் , தெளிவுடனும் (அசேர்ட்டிவ்) ஆக இருந்து கடமையை செய்யலாம் என்ற நோக்கில் எடுத்து செல்லலாம்.
- குறிப்பிட்ட இடைவெளியில் பிஹேவோரியால் ஆடிட் செய்தல் நல்லது. திருச்சி காவல்துறை சாத்தான்குளம் நிகழ்வை பாடமாக எடுத்து கொண்டு இதை உடனடியாக செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. பயிற்சி அளித்ததோடு விட்டுவிடாமல், பொது மக்களிடம் பழகும் விதத்தை ராண்டம் ஆடிட் செய்வதன் மூலம் இவ்வகையான குற்றங்கள் குறையும் வாய்ப்புகள் அதிகம். இது அனைத்து நிலை காவல்துறை அதிகாரிகளுக்கும் செய்தல் அவசியம்.
- காவல்துறையில் இருக்கும் கண் காணிப்பு கேமெராவின் பதிவுகளை ராண்டம் ஆடிட் செய்தல்.
இது மட்டுமின்றி, காவல்துறை அதிகாரி என்பது மருத்துவர், ஆசிரியர் போன்ற ஒரு பணியே தவிர தன் சுய விருப்பு வெறுப்பிற்கேற்ப அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் கூடாது என்னும் எண்ணத்தை வளர்த்தல் அவசியம். மேலும் தான் செய்யும் பணியை கருத்தில் கொண்டாவது மாஜிஸ்திரேட் அவர்களை அவதூறாக பேசும் முன் ஒரு முறை யோசித்திருக்கலாம் சாத்தான்குளம் காவலர். இப்படி யோசிக்காமல் கோபத்திலும் அவசரத்திலும் ஒருவர் செய்யும் செயலால் அந்த மொத்த துறையின் மீது இருக்கும் நம்பிக்கை சிதைக்கிறது. இந்த நிகழ்வை தாண்டியும் காவல்துறை மீது நம்பிக்கை வைக்க செய்தவர், அனைத்து காவலர்களும் கெட்டவர்கள் அல்ல என்பதற்கு சான்றே அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் திருமதி ரேவதி – அச்சமின்றி உண்மையை உடைத்த பெருமைக்குரியவர்.
சாத்தான்குளம் நிகழ்வு கற்றுக்கொடுத்த பாடங்களை கருத்தில் கொண்டு,பழி வாங்கும் எண்ணம் நீக்கி பாதுகாவலனாய் இருந்து இனி வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுத்து காவலாய் இருக்க வேண்டிய காவல் நிலையத்தை குற்றம் நிகழும் இடமாக்குவதை தவிர்க்க வேண்டுகிறோம்.