“மரியாதை மற்றும் மகிழ்ச்சியை காவு வாங்கிய ஒர் அறை”- தப்பட் ஒர் திரைகண்ணோட்டம்

Reading Time: 2 minutes

சமீபத்தில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம். திரைப்படம் சிறப்பாக விளங்க கதை நன்றாக இருக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் எந்தவித குறைவும் இல்லாமல் அந்த கதையை மக்களுக்கு சேர்க்க கதாநாயகர்கள் நன்றாக நடிக்க வேண்டும். இந்த இரண்டையும் இந்தப்படத்தில் அருமையாக கொடுத்துள்ளார்கள். கதாநாயகன்களை சுற்றியே கதைகள் சென்று கொண்டிருந்த வேளையில் கதாநாயகிகளை மையமாகக்கொண்டு புரட்சிகரமான படங்கள் வரத்தொடங்கின. அந்த தரவரிசையில் இப்பொழுது புதிதாக சேர்ந்த படம் தப்பட் (Thappad).

ஆரஞ்சு ஐஸ் குச்சியுடன் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார் இயக்குனர் அனுபவ் சின்ஹா. அந்த கதாபாத்திரங்கள் யார் என்பதை கூறாமல் கதை போன போக்கில் அறிந்து கொள்ளுமாறு கதையை நகர்த்துகிறார்.

‘தப்பட்’ என்ற இந்தி மொழி சொல்லிற்கு ‘பளார்’ என்னும் அறை என்ற அர்த்தம் உள்ள திரைப்படத்தின் பெயர் அந்த அறையை கொண்டே கதை நகர்கிறது. ஒரு அறையைக் கொண்டு படத்தை இவ்வளவு அழகாக நகர்த்தி கொண்டு செல்ல முடியுமா! என்று வியக்கும் அளவிற்கு இயக்குனரும், ம்ருன்மயீ லாகூ இருவரும் சேர்ந்து கதையை எழுதியுள்ளனர்.

விக்ரம்-அமிர்தா(பாவல் குல்டி-டாப்ஸி) மேல் தர வர்க்கத்தை சார்ந்த தம்பதியர். விக்ரம் தன் குடும்ப தொழிலை விடுத்து தனித்துவமாக விளங்குவதற்காக தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் வந்து ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் அவனின் அம்மா அவனை பிரியாமல் இருக்க அவர்களுடன் வாழ்கிறாள். அவனுக்கு வெளிநாடு சென்று அந்த அலுவலகத்திற்கு தலைமை அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு வேலை செய்கிறான்.

இல்லத்தரசியாக வரும் அமிர்தா(அம்மு) தினசரி வாழ்க்கையை ஒரே மாதிரியாக கழிக்கிறாள். அவளின்றி அவன் இல்லை என்பது பார்க்கும் நமக்கு புரிகிறது ஆனால் விக்ரமிற்கு புரியவில்லை. எது வேண்டுமானாலும் அம்முவை அழைக்கும் விக்ரமின் குரல். கணவன் அலுவலகத்திற்கு சென்ற பின் அடுத்த வீட்டு 13 வயது பெண்ணிற்கு கற்று கொடுக்கிறாள். அம்முவின் வீட்டு வேலைக்காரி தினமும் தன் கணவன் தன்னை அடிக்கிறான் என்று புலம்பலுடன் காட்சியளிக்கிறாள்.

இவ்வாறு கதை செல்கையில் வெளிநாடு வாய்ப்பிற்காக காத்திருக்கும் விக்ரமிற்கு அந்த நற்செய்தி கிடைத்து அதைக் கொண்டாடும் பொருட்டு தன் வீட்டிலேயே ஒரு பார்ட்டி வைக்கிறான். அதில் அவனுடைய மேலதிகாரியுடன் சர்ச்சை ஏற்பட்டு அதன் நடுவில் தன் மனைவியை அறைகிறான். அந்த ஒரு அறை அவனுக்கு சாதாரணமான விஷயமாக இருப்பினும் மற்றவர்களுக்கும் அது அவ்வாறே தெரிந்தாலும் அம்மு என்ன பாடு படுகிறாள்.

அந்த ஒர் அறை இருவருக்கும் நடுவில் விவாகரத்து வரைக்கும் செல்கிறது. ஆண்கள் தன் உரிமைக்காக எந்த அளவிற்கு செல்வார்கள் என்பதை விக்ரமின் கதாபாத்திரம் மூலமாக கூறி அதேசமயம் அம்முவின் கதாபாத்திரம் மூலமாக நியாயமான பெண்கள் நியாயத்தை கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளனர் என்பதை உணர்த்தி உள்ளார் இயக்குனர்.

அம்மு தன் வாதத்தை புகுந்த வீட்டில் பேசுகிறாள்; அப்பொழுது அனைத்து தம்பதியர்களுக்கு நடுவிலும் பெண்கள் குடும்பத்திற்காக எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்ந்து புரிந்து மனமார பேசிக்கொள்கிறார்கள்.

அம்முவிற்காக வாதாடும் வக்கீல் இவளது வாழ்க்கையால் தன் வாழ்க்கையை சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் வாழ முடிவெடுக்கிறாள்.

அம்முவின் தம்பி இவர்களது பிரச்சனையால் தன் காதலிக்கு தரவேண்டிய அந்தஸ்தையும் கொடுத்து புது மனிதனாக வாழ்கிறான்.

அந்த வேலைக்கார பெண் தன் கணவனிடம் கத்தியைக் கொடுத்து ‘அடிப்பதோடு என் நிறுத்திக் கொள்கிறாய் கொன்றுவிடு’ என்று புரட்சிகரமாக கிளம்பியதால் அவர் அடிப்பதை நிறுத்தி விட்டான்.

விக்ரமை தவறாக காட்டிருந்தாலும் ஆண்களில் நல்லவர்களும் உண்டு என்று கதாநாயகியின் தந்தை மற்றும் அந்த 13 வயது சிறுமியின் இறந்து போன தந்தையைப் பற்றியும் கூறியுள்ளார் இயக்குனர்.

க்ளைமாக்ஸில் விவாகரத்து வாங்க குடும்ப நீதி மன்றத்தின் முன் பல நாட்களுக்குப் பின் இருவரும் சந்திக்கும் சமயத்தில் விக்ரம் கூறும் உணர்வுபூர்வமான சொற்களைக் கேட்ட பின்னும் விவாகரத்து என்பது ஏமாற்றத்தை அளித்தது.

ஆண் பேரினவாதம் கொண்ட சமூகத்தில் நாம் வாழ்க்கையில் அதையேதான் நாம் கற்றுக் கொள்வோம் என்ற கருத்துடன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் (Amazon Prime) காணலாம்.

Leave a Reply