நடிப்பு சக்ரவர்த்தி !

Reading Time: 2 minutes

நாம் நேரில் கண்டிராத , செவி வழி செய்திகள் மூலமாகவும் அல்லது வரலாற்றின் மூலமாகவோ அறிந்த மாந்தர்களை கதாபாத்திரமாக ஏற்று நடிப்பதே பெரும் சவால். 

அப்படி நடிப்பவருக்கு மனதளவில்  பெரும் நெருக்கடி  ஏற்படும். அத்தகைய பெரிய மனிதர்களை சரியாக பிரதிபலிக்க வேண்டுமே என்று. 

Shivaji Ganesan
Shivaji Ganesan| Courtesy – imdb

ஆனால் வெகு  சிலருக்கோ அது கை வந்த கலை. கதாபாத்திரமாகவே ஒன்றி விடுவர். 

அப்படி பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சாதித்துக் காட்டியவர் நடிப்பு சக்கரவர்த்தி , நடிகர் திலகம் செவாலியே பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்கள். 

சிந்து நதியின் இசை பாடலில் பரதியாக , வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சீறிப்பாயும் விடுதலை வேங்கையாக , கர்ணனாக , அப்பராக , சிவனாக , கப்பல் ஓட்டிய தமிழனாக , ராஜராஜ சோழனுமாய் இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு நடித்து அசத்தினார்.

நடிப்பு என்றால் சிவாஜி , சிவாஜி என்றாலே நடிப்பு என்றாகிவிட்டது !.சக்சஸ் என்று கூறி பராசக்தி படத்தில்  தொடங்கிய அவரது நடிப்பு வேட்கை பல பரிமாணங்களில் பிரதிபலித்தது. 

பாசமலரில் நேசமான அண்ணன் , கவுரவம்மில் வக்கில் , மகன் என இரு வேறு கதாபாத்திரங்கள் . தெய்வ மகன் , திரி சூலம் ஆகிய படங்களில் மூன்று வேடங்கள் , நவராத்திரியில் ஒன்பது விதமான பாத்திரங்கள் , முதல் மரியாதை , மிருதங்க சக்கரவர்த்தி , பாகப்பிரிவினை , வியட்நாம் வீடு , படிக்காதவன் , தேவர்மகன் ,  ஒன்ஸ்மோர் , படையப்பா… அப்பப்பா எதைச் சொல்வது எதை விடுவது ! 

அவர் மறைந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் நிறைவடையப் போகிறது . இருந்தும் அவர் திரையுலகில் செய்த சாதனைகள் என்றும் நிலைத்தே இருக்கும். 

அவரின் அற்பணிப்பே அவரை இந்த அளவு உயர்த்தியுள்ளது . 

எந்த ஒரு படத்தில் நடிக்கவிருந்தாலும்  அதன் கதாபாத்திரத்தின் தன்மைப்படி படி   தன்னையே அதற்காக முழுவதும் அர்பணித்து விடுவார்.  

ராஜராஜசோழன் படத்தில் அவரின் நடை உடை ,மிடுக்கு , கம்பீரம் , வசன உச்சரிப்பை  பார்த்து அசருகிறோம் அல்லவா! 

அப்படமே தமிழில் முதலில் வந்த சினிமா ஸ்கோப் படம். அதாவது அகண்ட திரை அளவு மற்றும் பல்வேறு நிறத்தை தெளிவாக ( அன்றைய காலகட்டத்தில் ) பிரதிபலிப்பது .  அந்த தொழில்நுட்பம் பற்றியும் , ஒளி, ஒலி களவைகளைப் பற்றியும் நன்கு அறிந்து அதன் பின்னரே காட்சிகளில் நடித்து , முடிந்த அளவு மேலும் மெருகு ஏற்றுவார். 

தங்கப்பதக்கம் படத்தில் நடிப்பதற்கு முன் காவல்துறையினரின் உடல் மொழியை கவனித்து தேவையானதை வெள்ளித்திரையில் கொடுத்தார்.  

இதே போல் தான் வியட்நாம் வீடு படத்தில் நடிப்பதற்கு முன் தனது பிராமண நண்பரின் இல்லத்தில் தங்கி உள்வாங்கி பிரிஸ்டீஜ் பத்மநாபனாக பிரதிபலித்து அசத்தினார். 

முதல் மரியாதை படத்தின் இறுதிக்காட்சியில் வசனமே இல்லாமல்  கண் , கழுத்து குழி , முகம் என்று நடிப்பால் நெகிழச் செய்தார்.

கர்ணன் படத்தைப் பார்த்து கலங்காதவர் உண்டோ ? இன்னும் பல தலைமுறை கடந்தும் இவர் புகழ் நிலைத்து நிற்கும். 

தமிழ் வசனங்களை அவர் அளவிற்கு சரியாக யாரும் உச்சரித்தது இல்லை , இனி யாரும் உச்சரிக்கப் போவதும் இல்லை. 

தனது ஆறாவது வயதில் நடிப்பால் ஈர்க்கப்பட்டு நாடக குழுவில் இணைந்து , நடிப்புக்காகவே வாழ்ந்து மறைந்தார் . திரையைத் தவிர வெளியில் நடிக்கவே தெரியாத உன்னத மனிதர். 

சா.ரா.

Leave a Reply