சோ கால்டு ( So called “ Cho “ ) சோ அவர்கள் !

Reading Time: 3 minutes

                          

நடிகர் , நாடக ஆசிரியர் , எழுத்தாளர் , பத்திரிக்கை ஆசிரியர் , அரசியல் விமர்சகர் இன்னும் பற்பல பன்முக திறன் கொண்ட மாமனிதர் அமரர் “ சோ “ அவர்கள் .

Cho Ramaswamy
Cho Ramaswamy – deviantart.com

எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக எளிமையாக , மிக துணிச்சலாக , நேர்மையாக உள்ளது உள்ளபடி கூறிய ஒரு அரிய மனிதர்.

மிக சிறிய வயதில் அவர் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியை மிகவும் ரசித்து சிரித்தனர் எனது இல்லாதார்கள் . ஆனால் எனக்கோ ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியவில்லை .  அந்த காட்சியில் அவர் அன்றைய அரசியல் பொருள் ( என்றென்றும் பொருந்தும் ) படும் படி நடித்திருந்தார் . 

ஒரு முறை ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவரது பேட்டி ….  மொட்டைத்தலை … ஒரு கண்ணாடி … உருளும் விழி ஆனால் பேட்டி காண்பவருக்கோ  அது ஒரு “ அக்னிப்பரீச்சை “ ! சர்ச்சைக்கு உரிய ஒரு விஷயத்தை மிகவும் துணிச்சலாக , யார்மனதும் புண்படாமலும் அதே நேரத்தில் தனது கருத்தை எள் அளவு பிசகாமல் கூறினார் . பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாயிலை அடைத்த தருவாயில் அவரது நிலைப்பாடு எனக்கு புதிய ஒரு பரிமாணத்தை தந்தது .

எனது ஆசிரியர் திரு.ஆல்பர்ட் அந்தோணி அவர்கள்தான் “ சோ “ அவர்கள் பற்றி அதிகம் தெரிவித்தார் ! அடடா இவ்வளவு கால தாமதமாக அவரைப் பற்றி அறிகிறோம் என்று சற்று வருந்தினேன் . 

இன்றளவும் அவரைப்போல  அரசியல் நையாண்டி ( பொலிடிகல் சட்டைர் ) நாடகங்களை யாராலும் அரங்கேற்ற முடியாது . “ முகம்மது பின் துக்லக் “ என்னும் காலத்தால் அழிக்க முடியாத நாடகம் மற்றும் படம் அதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம் .

அந்நாடகத்தில் அவரது நடை உடை பாவனை , குரல் வேற்றுமை , குறிப்பாக தோற்றம் மிக அருமையாக , சிந்திக்கக் கூடிய சிரிப்பை வரவைக்கும் தோரணையில் அமைந்திருக்கும் .

அதில் இடம்பெற்ற பல காட்சிகள் இன்றைய சூழ்நிலைக்கு ஒத்துப்போவதே அவரது சிந்தனை திறனிற்கான சாட்சி !

“ தீர்ந்தது மொழிப் பிரச்னை “ என்று அவர் கூறும் தோரணை அலாதி .

ஆனால் அந்த நாடகம் அவ்வளவு எளிதில் அரங்கேறி விடவில்லை , பல கட்சிகளால் பல்வேறு இடையூறுகள் . அனைத்தையும் கடந்து மிகப் பெரிய வெற்றியை அடைந்தார் .

“ சம்பளம் வாங்காமலே , எனக்காக , எங்களது வெற்றிக்காக உழைக்கும் ஒரு பெரிய கூட்டமே உண்டு என்னிடம் , அவர்கள் உள்ளவரை எனக்கு என்ன   கவலை ? “ என்று அவருக்கே உரிய பாணியில் தெரிவித்தார் .

பின்னாளில் “ துக்ளக் “ என்ற பெயரிலிலேயே தமிழகத்தில் அதிக பிரிதிகள் விற்ற அரசியல் வார இதழை ஏறத்தாழ 46 வருடங்கள் நடத்தி வந்தார் . அந்த “ துக்ளக் “ பத்திரிக்கையின் ஆண்டு விழா மிகப் பிரபலம் . அது ஒரு வாசகர் திருவிழா .

அந்நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் எந்த வேறுபாடுமின்றி  கலந்துக்கொள்வர்.

இந்தியாவில் “ நெருக்கடி “ நிலை அமலில் இருந்த போது அதிகம் சென்சார் செய்யப்பட்டதும் அதே “ துக்ளக் “ பத்திரிக்கை தான் .

“ மக்களுக்கு அனாவசியமாக எந்த செய்தியையும் கொடுத்து அவர்களை கலவரப் படுத்திவிடக் கூடாது “ என்கிற உயரிய  பத்திரிக்கை தர்மத்தை கொள்கையாகவே கொண்டவர் .

எங்கே பிராமணன் என்னும்  நிகழ்ச்சியில் “ தடிதடியாக முதுகு சொரியும் படி பூணுல் அணிந்தால் மட்டும் அந்தணர் ஆகிவிட முடியாது , அதற்கும் பல கெடுபிடிகள் உண்டு “ என்று எதற்கும் அசராமல் கூறியவர் . அதே நிகழ்ச்சியில் இந்து மத நம்பிக்கைகள் , சாஸ்திரங்கள் , திருக்குறள் , தேவாரம் போன்ற நூல்களுக்கும் எளிய விளக்கம் அளித்தார் . “ ஹிந்து மகா சமுத்திரம் “ என்னும் அவர் எழுதிய நூல் ஒரு சமய சாகரம் ! 

ஒரு அதிரடியான கருத்தைக் கூறிவிட்டு அதற்க்கு எதிர் வினை எப்படி வரும் என்று அவரே சில நேரங்களில் “ மிமிக்ரியும் “ செய்து காட்டி விடுவார் .

தனி மனித ஒழுக்கம் மேம்பட அரபு நாடுகளை  கடுமையான சட்டதிட்டங்கள் தேவை என்று அடித்துக் கூறியவர் .

தேசிய பிரிவினை வாதம் பேசுபவர்களை அவர் எள்ளி நகையாடும் விதமே தனி ! 

இந்திய அளவில் பல அரசியல் பிரமுகர்கள் இவரிடமே சங்கடமான சூழலில் ஆலோசனை கேட்டு வருவர் ! பலர் அவரை “ ராஜ குரு “ என்றே அழைத்தனர் .

மாநில மற்றும் தேசிய அளவில் பல அரசியல் மாற்றங்களை செய்ய உறுதுணையாய் இருந்தவர் .

அவ்வளவு செல்வாக்கு இருந்தும் தன்னுடைய சுயநலத்திற்காக பயன் படுத்திக்கொண்டதே இல்லை .

அவரை ஜாதி , மத ரீதியாக மோசமாக விமர்சித்தவர்களையும் தரக் குறைவாக பேசியதே இல்லை .

அதே போல அவர் இறுதி வரை நடுநிலையை கைவிட்டதே இல்லை . அவர் ஆதரித்த கட்சியினைரை அக்கட்சியின்  தலைவரையே விமர்சித்தார் . அவரால் மட்டுமே முடிந்த விஷயம் அது .

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப்பற்றி … டிசம்பர் 7 அவரது நினைவு தினம் . 

சா.ரா .

Leave a Reply