அன்பு செய்வோம்!

Kids @pexels
Reading Time: 2 minutes

காலையில் அலாரம் ஒலி அவளை எழுப்பியது, எழ மனமில்லாமல் எழும் சிறுமி போல் தூக்கத்தை தூக்கி எறிந்து எழுந்தாள். பல் துலக்கி, காலை கடன் முடித்து சமையலறையில் நுழைந்ததும் யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை நினைவுபடுத்தி டீ, காபி, ஸ்மூத்தி என அனைத்தையும் தயார் செய்து அனைவரிடமும் கொடுத்து விட்டு , தனக்கான காபியை அருந்தும் நேரம், அம்மா… காய் என்ன வேணும்.. என காய் விற்கும் பெண்ணின் சத்தம் கேட்க காபியை பாதியிலேயே வைத்து விட்டு பரபரப்பாக ஒரு கூடையை எடுத்து கொண்டு காய் வாங்க தெருவிற்கு ஓடினாள்.

தக்காளி, வெங்காயம் என பேரம் பேசி, ஒருவாறாக வாங்கி முடித்து வீட்டிற்குள் திரும்பும் போது.. கொழுந்தன் வந்து அண்ணி என் ஹெட்போன பாத்தீங்களா என கேட்க, காயயை அடுபங்கரையில் வைத்து விட்டு, ஹெட்போனை தேடி கொடுத்துவிட்டு வந்தாள். ஆறிய காபி அவளை பார்த்து எள்ளி நகையாட.. மகள், அறையிலிருந்து அம்மா ஹோம்ஓர்க் நோட்ட காணும் எடுத்து கொடு என்று அழைக்க, காபியை சிங்கில் கொட்டி விட்டு அறைக்கு விரைந்து நோட்டை தேடி கொடுத்து சமையல் ஆரம்பித்த நேரம், நாத்தனார் குரல் கேட்டது எனக்கு உங்க பிங்க் சாரி வேணும், காலேஜ் கல்சுரல்ஸ் என சொல்ல. தன் புடவையை சட்டென எடுத்து கொடுத்தாள். சமையல் முடித்து வீட்டாருக்கு பரிமாறும் நேரம், லக்ஷ்மி என் டை எங்க வச்ச என கணவன் அதிகார தோரணையில் அலரவும் , அடித்து பிடித்து ஓடி போய் எடுத்துக் கொடுத்தாள்.

Grandma

இதெல்லாம் படம் போல கண் முன்னே ஓட, திருமணமான நாற்பது வருடமும் இப்படி பரபரப்பாக ஓடியதை எண்ணியபடி கிழவி ஒருத்தி வீட்டின் ஓரமாய் அமைதியில் ஆழ்ந்திருந்தாள். ஏதோ ஒரு சத்தம் அவள் சிந்தனையை கலைத்தது, அது வேறொன்றும் இல்லை பேர குழந்தைகள் வீடு திரும்பும் நேரம் எழ மறுக்கும் கால்களை வலுக்கட்டாயமாக எழுப்பி பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்து அவர்களோடு கதைகள் பல பேசி சிரித்தபடி இரவு உணவையும் தன் வீட்டாருக்கு செய்து கண் உறங்கியவள் , மீளா தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் எந்த உதவியும் யாருக்கும் அவள் செய்யவில்லை,வீட்டின் கடிகாரம் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது, வாசலில் பந்தல் போடப்பட்டது, வீட்டில் கூட்டம் சேர துவங்கிய போது வாசலிலே ஒருவர் நின்று திருவாசகம் பாட ஒவ்வொரு வரியும் வீட்டாரின் மனதை பிழிந்தது. மகள் அழுதபடி உறவினர்களோடு சேர்ந்து கிழவியின் உடலை குளிப்பாட்ட, மருமகள் கண்ணீரோடு வீட்டை கழுவிய போது பொணத்தை எடுத்தாச்சா என்றபடி எவரோ வீட்டில் நுழைய வீட்டாரின் மனதில் ஒரே ஒரு சிந்தனை தான் மிஞ்சியதுஅந்த வீட்டின் உயிராய் இருந்தவளின் உயிர் பிரிந்ததும் தான் அவர் பிணம் என்றார் ஆனால் அவரவர் தேவை பூர்த்தியானதும் நன்றி கூட கூறாமல், சரியாய் அவளிடம் பேசாமல் நேரம் செலவிடாமல், அவளுக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்காமல் அவளை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல் பிணம் போல் நடத்திய நம் அனைவரின் ஆணவதுக்கும் ஆண்டவன் கொடுத்த அன்பு பரிசு தான் அவளின் மரணம் என்று உணர்ந்தார்கள்.

உயிருடன் இருக்கும் போதே உடனிருக்கும் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள், நேரம் செலவிடுங்கள், தேவையறிந்து பூர்த்தி செய்யுங்கள். வாழ கிடைத்த இந்த வாய்ப்பை முழுமையாய் பயன்படுத்துங்கள். பணம், வேலை , சமூக வலைத்தளங்கள் இவை வாழ்வின் ஒரு அங்கம் மட்டுமே, அதுவே வாழ்க்கையல்ல. நமக்காக நம்முடன் இருப்போருக்கு அன்பு செய்வோம்.

Leave a Reply