உலக சகோதரர்கள் தினம்

Brother & Sister @pexels
Reading Time: < 1 minute

நமக்கு ஏதோ ஒரு பிரச்சினையென்றால் நமக்காக தந்தைக்கு அடுத்து நமக்காக வந்து நிற்பது நம் சகோதரன் தான். அண்ணன் தங்கை உறவு அண்ணன் தம்பி உறவு அக்கா தம்பி உறவு என்று இத்தனை உறவுகளாய் நமக்கு அண்ணனாக தம்பியாக பக்கப்பலமாக நிற்பவன் நம் சகோதரன். அவர்களுடைய பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது. தன் உடன்பிறப்பிற்காக உயிரைக் கூடத் துணிந்துக் கொடுக்கும் சகோதரர்களைப் போற்றும் விதமாக மே 24 ஆம் நாள் உலகம் முழுவதும் உலக சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒன்றாக வளர்ந்து இறுதி வரை நமக்காகத் தோள் கொடுப்பது சகோதரர் மட்டுமே. எத்தனைப் பிரச்சினைகள் இருந்தாலும் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று நமக்குத் துணையாக இருப்பவர் நம் சகோதரர் மட்டுமே. அண்ணன் ஆகட்டும் தம்பி ஆகட்டும் தன் சகோதரிக்காக எதையும் செய்யத் துணிவான். இதுவும் கடந்துப் போகும் என்று பல நேரங்களில் நம்மைச் சமாதானப்படுத்துவதும் சகோதரர் தான்.


தந்தையில்லா வீட்டில் தந்தைக்குத் தந்தையாக  குடும்ப பாரத்தைச் சுமக்கிறான். சின்ன வயதில் இருவரும் கைகோர்த்து விளையாடிய காலம் பொற்காலம். தங்கையையோ தம்பியையோ முதுகில் சுமந்து விளையாடி மகிழ்வான். உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கணும் எப்போதுமே என்று எப்பொழுதும் தன் பாசத்தை உணர்த்திக் கொண்டேயிருப்பான். தங்கைக்கோ அக்காவிற்கோ திருமணம் என்றால் பெற்றவரைத் தாண்டி அதிகம் மகிழ்பவன் சகோதரன் தான்.


சின்ன சின்ன கொஞ்சல்கள் சின்ன சின்ன சீண்டல்கள் சின்ன சின்ன சண்டைகள் பெற்றோரிடம் சொல்ல முடியாதப் பிரச்சினைகளைக் கூட நம் சகோதரனிடத்தில் சொல்லலாம்.நல்லது கெட்டது அனைத்திற்கும் முன் நின்று நிற்பவன் சகோதரனே. அதிலும் மாமா என்ற உறவுக்காக அவர்கள் விட்டுக் கொடுப்பதும் இழப்பதும் அதிகம். அக்கா குழந்தைகள் அல்லது தம்பி தங்கை குழந்தைகள் இருந்தால் அவர்களை அன்போடு கொஞ்சி மகிழ்வான். 


தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். வயதில் சிறியவனாக இருந்தாலும் அவர்கள் குணத்தால் உயர்ந்தவர்கள். கூடப்பிறந்தவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த நேரமாயினும் ஓடோடி வருபவர்கள் அவரே. எத்தனை உறவுகள் நமக்கு இருந்தாலும் சகோதர உறவு மட்டுமே நிலையானது. அண்ணன் தம்பி இல்லாதப் பெண்கள் வெளியில் பார்க்கும் அண்ணன்களைப் பார்த்து இப்படி ஒரு அண்ணன் எனக்கு இல்லையே என்று கூறுவதும் உண்டு. 


பாசமலர் படத்தில் சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். அப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அப்படத்தில் அண்ணன் தங்கையின் பாசத்தை விளக்கியிருப்பார்கள். அவர்களைப் போல ஆயிரமாயிரம் பாசமலர்கள் நம் நாட்டிலும் உண்டு. என்ன தவம் செய்தோம் அண்ணன் தங்கையாகி விட்டோம் என்று நமக்குப் பக்கபலமாக இருக்கும் சகோதரர்களைப் போற்ற வேண்டும்.


நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை என்று நெஞ்சுயர்த்திக் கூறும் அண்ணன் தம்பிகளும் உண்டு.சகோதரனாக தந்தையாக இருக்கும் அவர்களைப் போற்றுவோம் இந்நாளில்.

Leave a Reply