ஜாக்‌ என்னும்‌ தொடர்‌ கொலையாளி

Reading Time: 2 minutes

இராட்சன்‌ என்று சமீபத்தில்‌ வெளியான ஒரு சைக்கோ பற்றிய திரைபடத்தை பெரும்பாலானோர்‌ பார்த்திருப்போம்‌. அதில்‌ கதாநாயகன்‌ தன்‌ பெண்‌ மேலதிகாரிக்கு நடந்த கொலைகளை செய்தது ஒரு சைக்கோ தான்‌ என்பதை புரிய வைக்க பல சைக்கோ எடுத்துக்காட்டுகளை முன்‌ வைப்பார்‌. அப்போது “ஜாக்‌ தி ரிப்பர்‌”(Jack the Ripper) என்ற ஒரு சைக்கோ கொலையாளியின்‌ பெயரையும்‌ முன்‌ வைப்பார்‌.

உண்மை என்னவென்றால்‌ அந்த கொலை வழக்குகளை கையாண்ட லண்டன்‌ அரசாங்கத்திற்கே ஜாக்‌ யார்‌ என்று தெரியாது. வாருங்கள்‌ ஜாக்‌ பற்றிய அந்த சுவாரசியமான அதே சமயம்‌ கொடூரமான கதையை பார்ப்போம்‌.

1888 ஆம்‌ ஆண்டில்‌ உள்நாட்டு போர்‌ மற்றும்‌ அகதிகளின்‌ காரணமாக லண்டனில்‌ குறிப்பிட்ட பகுதிகளில்‌ பஞ்சம்‌ நிலவியது. குடி, திருட்டு, சூதாட்டம்‌, பாலியல்‌ தொழில்‌ போன்ற அநியாயங்கள்‌ தலை விரித்தாடின. அன்று ஆகஸ்ட்‌ 31 அதிகாலையில்‌ பாலி என்றும்‌ அழைக்கப்படும்‌ மேரி ஆன்‌ நிக்கோல்ஸ்‌, வைட்‌ சாப்பல்‌ (White chappel) மாவட்டத்தில்‌ ஒரு தெருவில்‌ கொலை செய்யபட்டு கிடந்தார்‌. தொண்டை இரண்டு வெட்டுக்களாக துண்டிக்கப்பட்டிருந்தது. மற்றும்‌ அடிவயிற்றின்‌ கீழ்‌ பகுதி ஆழமாக வெட்டப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. அதே கத்தியால்‌ அடிவயிற்றில்‌ பல கீறல்கள்‌ போடபட்டிருந்தன.

43 வயதான மேரி ஐந்து பிள்ளைகளுக்கு தாயார்‌ மற்றும்‌ அவரே ஜாக்‌ தி ரிப்பரின்‌ முதல்‌ பலி என உறுதிப்படுத்தப்பட்டவர்‌. கணவனால்‌ கைவிடப்பட்ட அவர்‌, பணிமனைகள்‌, விபச்சாரம்‌ மற்றும்‌ திருட்டு‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ வாழ்க்கையை நடத்தி வந்தார்‌.

ஒரு வாரம்‌ கழித்து, 47 வயதான விதவை மற்றும்‌ தாயான அன்னி சாப்மேன்‌ செப்டம்பர்‌ 8 ஆம்‌ தேதி காலை 6 மணிக்கு முன்பு ஹான்பரி தெருவில்‌ ஒரு முற்றத்தில்‌ பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்‌. அவரும்‌ பாலியல்‌ தொழில்‌ செய்து வந்தவர்‌.அவரது காயங்கள்‌ நிக்கோலஸைப்‌ போலவே தோன்றின, ஆனால்‌ அவளுடைய சில உள்‌ உறுப்புகளை காணவில்லை. அந்த மாத இறுதியில்‌, கொலையாளி ஒரே இரவில்‌

மேலும்‌ இரண்டு உயிர்களைக்‌ கொன்றுவிட்டான்‌. எலிசபெத்‌ ஸ்ட்ரைட்‌, வயது 45, மற்றும்‌ கேத்தரின்‌ எடோவ்ஸ்‌, வயது 46. பின்னர்‌ சில நாட்கள்‌ கழித்து ஓல்ட்‌ மேரி ஜேன்‌ கெல்லி மில்லர்ஸ்‌ என்ற பெண்‌ கோர்ட்டில்‌ ஒரு உறைவிடத்தில்‌ கொடூரமாக சிதைக்கப்பட்டவளாக கண்டுபிடிக்கப்பட்டாள்‌.

ஆகஸ்ட்‌ 7 முதல்‌ செப்டம்பர்‌ 10, 1888 வரை லண்டனின்‌ ஈஸ்ட்‌ எண்டின்‌ வைட்‌ சேப்பல்‌ மாவட்டத்திலும்‌ அதன்‌ அருகிலும்‌ ஐந்து கொலைகள்‌ நடந்தன.

யார்‌ இந்த கொலைகளை செய்தது என போலீஸாரும்‌ மண்டையை பிய்த்து கொண்டனர்‌. ஆனால்‌ ஒருதடயம்கூட சிக்கவில்லை. கொலை செய்யும்‌ முறை மட்டும்‌ ஒரே மாதிரியாக இருந்தது.

“ப்ரம்‌ ஹெல்‌”( From Hell) என்ற பெயரில்‌ கடிதம்‌ ஒன்று, 1888 அக்டோபர்‌ 16 அன்று வைட்‌ சேப்பல்‌ விஜிலென்ஸ்‌ கமிட்டியின்‌ தலைவர்‌ ஜார்ஜ்‌ லஸ்க்‌ அவர்களால்‌ பெறப்பட்டது. அந்தக்‌ கடிதத்தில்‌ ஜாக்‌ தி ரிப்பர்‌ என்று கையெழுத்திடபட்டிருந்தது. அந்தக்‌ கடிதம்‌ ஒரு சிறிய பெட்டியுடன்‌ வந்தது. அந்த பெட்டிக்குள்‌ லஸ்க்‌ ஒரு சிறுநீரகத்தின்‌ பாதியைக்‌ பார்த்தார்‌.

கொலை செய்ய பட்ட எடோவ்ஸின்‌ இடது சிறுநீரகம்‌ கொலையாளியால்‌ அகற்றப்பட்டிருந்தது. காணாமல்‌ போன அந்த சிறுநீரத்தின்‌ பாதி தான்‌ அது. மீதி பாதியை “வறுத்தெடுத்து சாப்பிட்டேன்‌” என்று அந்த கடிதத்தின் எழுத்தாளர்‌ எழுதியிருந்தார்‌.

சிறுநீரகத்தை லண்டன்‌ மருத்துவமனையின்‌ டாக்டர்‌ தாமஸ்‌ ஓபன்ஷா பரிசோதித்தார்‌. அவர்‌ அது ஒரு மனிதனின்‌ இடது புற சிறுநீரகம்‌ என்று உறுதி செய்தார்‌. ஆனால்‌ அவரால்‌ வேறு எந்த உயிரியல்‌ பண்புகளையும்‌ தீர்மானிக்க முடியவில்லை.

ஓபன்ஷா பின்னர்‌ ‘ஜாக்‌ தி ரிப்பர்‌” என்று கையெழுத்திட்ட வேறு கடிதத்தையும்‌ பெற்றார்‌. இந்த கடிதங்களே “ஜாக்‌ தி ரிப்பர்‌” என்ற பெயர்‌ கொலைகாரனுக்கு வழங்கப்பட்டு பிரபலமடைய காரணமாக அமைந்தது. ஆனால் கொலைகாரனின்‌ உண்மையான பெயரோ இவன்‌ தான்‌ கொலைகாரன்‌ என்றோ உறுதியாக யாருக்கும்‌ தெரியாது.

Leave a Reply