என் ஃபிரெண்ட போல யாரு மச்சான்..?

என் ஃபிரெண்ட போல யாரு மச்சான்..?
Reading Time: < 1 minute

சின்னஞ் சிறு கிளியே..கண்ணம்மா..! வின் தொடர்ச்சி..

நட்பைப் பேணுங்கள்:

குழந்தை ஏழு முதல் எட்டு வயது வரை.. தன்னைஅறியாது தவறு செய்யும் வரை – பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், தேவைப்பட்டால் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரை நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டலாம், ஆனால் பதினாறுக்குப் பிறகு நீங்கள் அவர்களுக்கு நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நண்பராகிவிட்டால், அவர்கள் மேம்படுவார்கள். அதே நேரம் ஒரு பெற்றோராக உங்கள் அதிகாரத்தை அவர்கள் மீது நீங்கள் உறுதிப்படுத்தினால், அவர்களை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் நட்பு உறுதியானால் சிறுவர்கள் வேறு இடங்களில் ஆறுதலையும் வழிகாட்டலையும் தேட மாட்டார்கள். ஒரு நண்பர் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் குழந்தையுடன் நீங்கள் செய்ய வேண்டும்; அவர்களோடு விளையாடுவது, ஒன்றாக தேநீர் அருந்துதல், படம் பார்ப்பது, சுற்றுலா செல்வது போன்றவற்றைச் செய்வதனால் அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களாக எப்பொழுதும் இருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் உங்களுடையவராகவும் இருப்பார்கள், இல்லையெனில் நீங்கள் அவர்களை இழக்க நேரிடும்.

• முதலில், அவர்களுடன் நண்பர்களாக வாழ விரும்பும் முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.

உங்கள் நண்பர் ஏதேனும் தவறு செய்கிறார் என்றால், அவரை எச்சரிக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள்? அவர் உங்கள் அறிவுரையைக் கேட்கும் வரை மட்டுமே நீங்கள் அவருக்கு அறிவுரை கூறுவீர்கள், ஆனால் நீங்கள் அவரிடம் எதையும் மறைக்க மாட்டீர்கள். அவர் கேட்கவில்லை என்றால், அந்த முடிவு அவருடையது என்று நீங்கள் விட்டு விடுவீர்கள்.

உங்கள் பிள்ளைக்கு நண்பராக இருக்க, உலக கண்ணோட்டத்தில் நீங்கள் அவருடைய தந்தை, தாய் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் உங்கள் மனதில், உங்களை நீங்களே அவருடைய மகன், மகள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். தந்தை தனது குழந்தையின் நிலைக்கு வரும்போது, ​​அவர் ஒரு நண்பராக ஏற்றுக்கொள்ளப்படுவார். நண்பராக மாற வேறு வழியில்லை.

உங்களை மேம்படுத்துங்கள்:

இது பெற்றோரின் மிகப்பெரிய மற்றும் நுட்பமான பங்காகும். நீங்கள் தூய்மையாக இருக்கும்போதுதான் தூய்மையான அன்பு உங்களுக்குள் எழும், அதாவது கோபம், பெருமை, வஞ்சகம், பேராசை, பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடுங்கள். நீங்கள் முன்னேறினால், சுற்றியுள்ள எல்லாம் உங்கள் இருப்பு மூலம் மேம்படும். முதலில் தன்னை மேம்படுத்துபவன் தான், பின்னர் மற்றவர்களை மேம்படுத்த முடியும்.

மேம்பட்டவர் என்று யாரைக் குறிப்பிடலாம்?

நீங்கள் திட்டும்போது கூட, குழந்தை அதன் பின்னால் இருக்கும் அன்பைக் காணும். நீங்கள் கண்டிக்கலாம், ஆனால் அதை அன்போடு செய்தால், மற்றவர் மேம்படுவார். பெற்றோர் நல்லவர்களாக இருந்தால், குழந்தைகள் நல்லவர்களாக இருப்பார்கள், அவர்கள் விவேகமானவர்களாக இருப்பார்கள்.

குழந்தைகளை ஒழுக்க விழுமியங்களில் பணக்காரர்களாக மாற்றுங்கள்.மற்ற செல்வங்கள் தானாக வந்து சேரும்.”

Leave a Reply